Saturday 24 November 2018

கனவில் புகுந்த வனம்! 

பைக்கர் மேனியா! Nov-2013


சென்னையில் இருந்து குற்றாலம், ஆரியங்காவு வழியாக கேரளாவுக்குள் நுழைந்தால், என்ன பார்க்கலாம்? இரண்டு பைக்குகள், நான்கு ரைடர்கள். விறுவிறுப்புக்கும் சுறுசுறுப்புக்கும் சற்றும் பஞ்சம் இருக்காது. இயற்கையை இலக்காகவைத்து ஆரம்பமானது பயணம். 
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்வது காற்றில் பறப்பது மாதிரியான சுகமான அனுபவம். மதுரை செல்லும் 135 கி.மீ தூரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. மதுரையில் சூடாக டீ அருந்திவிட்டு, ரிங் ரோடு வழியாக திருமங்கலம் அடைந்தோம். இங்கிருந்து குற்றாலம் சுமார் 160 கி.மீ. ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டியதும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் வரவேற்க, நீண்ட மலைத் தொடரை பராக்கு பார்த்தபடியே பைக்குகளை ஓட்டிச் சென்றோம்.
இது நால்வழிச் சாலை அல்ல. எனவே, நிதானமாகத்தான் செல்ல முடிந்தது. தென்காசி நெருங்கும்போதே பருவ நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. குற்றாலம் கடந்து ஐந்தருவி நோக்கிச் சென்றோம். வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைவு. தண்ணீரும் குறைவு.
நேரம் ஓடத் தொடங்க... பைக் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. செங்கோட்டை தாண்டியதும், நாம் எதிர்பார்த்து வந்த மலைப் பாதை ஆரம்பமானது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முகப்பில் உற்சாகத்துடன் நுழைந்தோம். ஆரியங்காவு தமிழக - கேரள எல்லை சோதனைச்சாவடியைக் கடந்ததும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன், பசுமைக் கம்பளம் விரித்து வரவேற்றன மலை முகடுகள்.
அடுத்த 15 நிமிடங்களில் 'பாலருவி’ செல்வதற்கான நுழைவுக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு கிளைச் சாலையில் மெதுவாகச் சென்றோம். நீண்டு பருத்த மரங்கள், பச்சையாக வளர்ந்த செடிகொடிகள் கண்களுக்கு விருந்தளிக்க, ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய ஆலமரம். அதன் கீழே இதமான தென்றலோடு பஞ்சுபோன்று மென்மையான புற்கள் படர்ந்திருந்தது. 'பாலருவி’ என்ற பெயர் இந்த அருவிக்கு எப்படிப் பொருந்தும் என்பதைப் பார்க்கும்போதே உணர முடியும். தென் கேரளத்தின் அடர்ந்த வனப் பகுதிகளை வலம் வருவோம் எனத் தெரியாமல் 'கல்லடா’ ஆற்றுப் படுகையில் பயணித்தோம்.
ஆற்றங்கரையை ரசிப்பதா? செழிப்பான இயற்கை வளத்தை ரசிப்பதா? இந்த அற்புத பூமியில் பைக்குடன் வலம் வருவதை ரசிப்பதா? என்ற கேள்விகளுக்கிடையே காடும் நீரும் இரண்டறக் கலந்து பச்சைப் பசேலென்று அமைதியாகத் தோன்றிய தென்மலை நீர்த்தேக்கம், வியப்பின் உச்சம்.
அடுத்து, பத்தனபுரத்தை அடைந்தோம். குமுளி வழியாக தமிழகம் திரும்ப முடிவெடுத்து, பத்தினம்திட்டாவில் இருந்து சபரிமலை செல்லும் பாதையைப் பிடித்தோம். எரிமேலி நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக்கொண்டே அதன் வளைந்து நெளிந்த பாதையில் பயணித்தோம். எரிமேலி தாண்டியதும், மலை மீது ஏறத் தொடங்கியது சாலை. குளிரோடு பயணத்தைத் தொடர்ந்தோம். அப்போது பெய்த மழைச் சாரலால், வெண் மேகங்கள் உதிர ஆரம்பித்தன. கண்கள் ரசித்த அற்புதக் காட்சிகளை, கேமராவில் பதிவு செய்ய நேரம் இல்லை. மீண்டும் இந்த வழியாக பைக்கில் வர வேண்டும் என மனதைத் தூண்டிய தருணம் அது.
வண்டிப் பெரியாரில், பெரியார் ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும் தேயிலைத் தோட்டம் வழிநெடுகிலும் பரந்துவிரிந்திருந்தது. குமுளியில் இருந்து மலையை விட்டுக் கீழே இறங்கும்போது, பெரியார் நீர் மின் நிலையத்துக்கான ராட்சதக் குழாய்களை ரசித்தபடியே இறங்கினோம். தமிழகத்தின் 'மருத நிலம்’ தென்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டும்போது நண்பனிடம் வலதுபுறமாகக் கைகாட்டி, 'இதோ தெரிகிறதே ஒரு மலைத்தொடர். இதுதான் நாங்கள் சென்ற மேகமலையின் பின் பக்கம்’ என்றதும் வியப்புடன் பார்த்தான். ஆனால், ஆச்சரியத்தின் உச்சக்கட்டம், கம்பத்தைத் தாண்டும்போது அரங்கேறும் என அப்போது தெரியாது. விழிகள் வலதுபுறமாகத் திரும்பும்போது தெரிந்த மலைத் தொடர், மீண்டும் மேகமலை.
'மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆழமும் அடர்வும் என்னவென்று இப்போதுதான் யூகிக்க முடிகிறது’ என்ற நண்பனின் கண்களில் களைப்பைத் தாண்டியும் ஆச்சர்யம். குமுளி - திண்டுக்கல் 160 கி.மீ. மீண்டும் மக்கள் நெரிசல்மிக்க பகுதியைக் கடந்து திண்டுக்கல் அடைந்தோம்.
மதிய உணவு மறந்துபோக, பயணம் உச்சகட்டக் களைப்பைத் தந்திருந்தது. பாலத்தின் அடியில் ஒரு குட்டி உறக்கத்தை அடுத்து, சர்வீஸ் ரோட்டில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்ட பிறகுதான் தெம்பு வந்தது. நினைவலைகள் மீண்டும் உயிர் பெற்றன. சேலத்தில் இருக்கும் என் வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது, நள்ளிரவு ஆகியிருக்க... தூக்கத்தில் விழுந்தோம். மீண்டும் கனவில் புகுந்துகொள்கிறது வனம்!

சென்னை to பிஆர் ஹில்ஸ்!

பைக்கர் மேனியா! Oct-2013

பசுமைச் சோலை!பயண அனுபவம்
சுற்றுலா என்றாலே பிரபலமான இடங்களுக்குச் செல்வதுதான் பலரது வாடிக்கை. இன்னும் பிரபலமாகாத ஏராளமான சுற்றுலாத் தலங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. அதில், ஓர் அற்புதமான இடம்தான் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் 'பிலிகிரி ரங்கசாமி ஆலய வனவிலங்குக் காப்பகம்!’ 
இதைச் சுருக்கமாக பிஆர் ஹில்ஸ் என்கிறார்கள். சென்னையில் இருந்து சுமார் 600 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த இடத்துக்குச் செல்ல மூன்று வழிகள் உள்ளன.
சென்னைவாசிகள், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளேகால் வழியாக பிஆர் ஹில்ஸ் செல்லலாம். பயணம் மிகவும் சுவாரஸ்யமாக அமைய வேண்டும் என்றால், சத்தியமங்கலம் மலைச் சாலை வழியாகவும் பிஆர் ஹில்ஸ் செல்லலாம்!
இம்முறை குழுப் பயணம் இல்லை. உடன் என் நண்பர் ஒருவர் மட்டுமே! சேலம், சத்தியமங்கலம் வழியாகச் செல்லலாம் என முடிவெடுத்துக் கிளம்பினோம். பயணம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே பைக்கை நன்கு சர்வீஸ் செய்துவிட்டதால், நம்பிக்கையோடு  சென்னையில் இருந்து மாலையில் கிளம்பி சேலத்தில் சிற்றுண்டியை முடித்துவிட்டு, இரவு 11 மணிக்கு சத்தியமங்கலம் அடைந்தோம்
சத்தியமங்கலம் சோதனைச் சாவடியில் பயங்கரக் கெடுபிடி. இரவில் பைக்கில் செல்ல அனுமதிக்க மறுத்த காவல்துறை அதிகாரியிடம் பேசி, ஒரு வழியாக அனுமதி வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மலைப் பாதையின் ஆரம்பத்தில் எனக்கு முன் வேகமாகச் சென்ற கார் சட்டென எச்சரிக்கை விளக்கு போட்டு நின்றது. பில்லியனில் இருந்த நண்பன் எச்சரிக்க... நானும் பைக்கை நிறுத்தினேன்.
நள்ளிரவு... காரிருள் சூழலில் யானைக் கூட்டம் ஒன்று மெதுவாகச் சாலையைக் கடக்க... த்ரில்லிங்காக இருந்தாலும் பயம் லேசாகக் கவ்வியது. ஹெட்லைட்டை டிம் டிப் மாற்றி மாற்றி ஒளிர விட்டுக்கொண்டே மெதுவாக பைக்கைச் செலுத்தினேன். எதிரே வந்த லாரியின் டிரைவர், 'ஆசனூர் அருகே யானைக் கூட்டம் சாலையில் நிற்கிறது. கவனமாகச் செல்லுங்கள்’ என்று சொல்ல... பயமும் பதற்றமும் அதிகரித்தது.
நள்ளிரவு ஒரு மணி. கொண்டை ஊசி வளைவு ஒன்றில் இருந்து பார்த்தபோது, மலைப் பாதை எல்லாம் யானையாகவே தெரிகிறது... ஒருவழியாக ஆசனூரை அடைந்தோம்.
ஆசனூரை அடுத்து இருக்கும் தமிழ்நாடு - கர்நாடகா எல்லை சோதனைச் சாவடியைத் தாண்டி நடுங்கும் குளிரில் பயணத்தைத் தொடர்ந்தோம். சாம்ராஜ் நகரை நெருங்கும் போது, தாத்தா ஒருவர் டீக்கடை திறந்து வைத்திருந்தார்.  அங்கு டீ குடித்துவிட்டு, அருகில் இருந்த கோயில் வளாகத்தில் காலை வரை ஓய்வெடுக்க அனுமதி கேட்டேன். நல் உள்ளம் கொண்ட தாத்தா, உறங்குவதற்குப் பாயும் தலையணையும் கொடுத்தார்.
அதிகாலை எழுந்து பிஆர் ஹில்ஸ் நோக்கிச் சென்றோம். காலை 6.30 மணிக்கு நாகவல்லி, நல்லூர் வழியாக பிஆர் ஹில்ஸ் சோதனைச் சாவடியை அடைந்தோம். வேறு மாநில வாகனங்கள் என்பதால், சிறிது நேர உரையாடலுடன் நுழைவுக் கட்டணம் செலுத்தி, சோதனைச் சாவடியைத் தாண்டியதும், கண்களுக்கு அருமையான விருந்து.
ஒற்றையடி மலைப் பாதை, சத்தம், அசுத்தம் என எவ்வித மாசும் இல்லாத தூய்மையான பாதை. புள்ளிமான் கூட்டங்கள் சாலையில் அங்குமிங்குமாக ஓடி விளையாட... ஆங்காங்கே செழிப்பான நாட்டுச் சேவல் கொண்டையை வீசி வீசி ஆட... காட்டெருமை திமிலுடன் கம்பீரமாக வலம் வர... அற்புதமான காட்சி. சற்று தூரத்தில் ஒரு அழகான செந்நிற நீர்த் தேக்கம். விதவிதமான பறவைகளின் கீச்சிடும் ஓசை. சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்தை அடுத்து, கிழக்கு நோக்கிப் பரந்து விரிந்த மலைத் தொடர்தான் இந்த பிலிகிரி ரங்கசாமி வனவிலங்குக் காப்பகம்.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே வன விலங்குகள் இடப் பெயர்ச்சிக்கான இணைப்புப் பாலம் என்றே இந்த இடத்தைச் சொல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 2,500 முதல் 3,500 அடி உயரம் கொண்ட இந்த மலையில், கால நிலை மிகவும் இதமாகவே இருக்கிறது. கடும் குளிர் விரும்பாதவர்களுக்கு மிகவும் ஏற்ற இடம். 'பசுமைச் சுடுகாடு’ என அழைக்கப்படும் டீ, காபி எஸ்டேட் இல்லாதது இந்த இடத்த்தின் சிறப்பு. எங்கு பார்த்தாலும் உயரமான மரங்களும் அடர்ந்த செடி கொடிகளுமாகத்தான் இருக்கிறது. இங்கு சுமார் 250 வகை பறவை இனங்களும், 800-க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் இந்த மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 13 புலிகள் இருப்பதாக சமீபத்தியக் கணக்கெடுப்பு கூறுகிறது.
பிஆர் ஹில்ஸ் மலையில் அழகான சின்ன வீடுகள். அங்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகள். அங்குள்ளவர்கள் யானைகளுடன் பயத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பிஆர் கோயிலை அடைந்தோம். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக, விடுதிகள் அங்கு உள்ளன. பழைமையான பிலிகிரி ரங்கசாமி (பாலாஜி) கோயில், கன்னட மக்களுக்குப் பழக்கப்பட்ட இடம். அருமையான வியூ பாய்ன்ட், நிம்மதியாக ஓய்வு எடுக்கச் சிறந்த இடம். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்ப முடிவு செய்தோம்.
மேற்கில் இருந்து கிழக்காக மாதேஸ்வரன் மலை வழியாகப் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்து, ஏலாந்தூர் வழியாக கொள்ளேகால் அடைந்தோம். சாலை மிகவும் மோசமாக இருந்தது. 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் ஓட்டுவது சிரமமாக இருந்தது. வழியில் உள்ள மேல் மாதேஸ்வரன் மலைக் கோயில், மிகப் பழைமையான சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம். மாதேஸ்வரன் மலையில் இருந்து இறங்கி, தமிழக எல்லையைத் தொடும் வரை சாலை மோசமாகவே இருந்தது. அடுத்து காவிரித் தாய் கடல் போலக் காட்சியளிக்கும் மேட்டூர் அணையில், ஞாயிற்றுக் கிழமை என்பதால், கூட்டம் அலைமோதியது. அங்கே ஒரு குளியல் போட்டுவிட்டு, சுவையான அணை மீன்களை ஒரு கை பார்த்துவிட்டு, சென்னை திரும்பினோம்!
- ட்ரிப் அடிப்போம்

சென்னை to மேகமலை - 

பைக்கர் மேனியா! Sep-2013


அசல் ஆஃப் ரோடிங் பயணம் செய்ய வேண்டும். வார விடுமுறையில் தென்மேற்குப் பருவ மழையில் நனைய வேண்டும் என முடிவு செய்தபோது நினைவுக்கு வந்தது, தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை. சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை மொத்தம் 15 பைக்குகள், ஒரே ஒரு காருடன் பயணம் தொடங்கியது.
 திட்டமிட்டபடி நால்வழிச் சாலையில் நிதானமாக மிதந்து, சேலத்தில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு... கரூர், திண்டுக்கல் வழியாக தேனி, சின்னமனூரை சனிக்கிழமை மதியம் அடைந்தோம்.
மேகமலையில் இரவு உணவுக்குத் திட்டமிட்டு, அதற்குத் தேவையான சமையல் பொருட்களை வாங்கிக்கொண்டு மலைப் பாதையை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாகச் சென்றோம். குண்டும் குழியுமான, வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடிப் பாதை போன்ற சாலையில் மிகக் கவனமாக மேலேறினோம். ஆனால், கார்தான் மிகவும் சிரமப்பட்டது.
தென்றலாக வீசிய பருவக்காற்று; ரோமத்தைச் சிலிர்க்க வைத்து மெய் தீண்டும் இதமான மழைச் சாரல்; மாலைப் பொழுதை மயங்க வைக்கும் கருமேகங்களால் சூழ்ந்த சூரியனின் வெண்மையான ஒளிக் கற்றை; பச்சைப் பசேலென்று வளர்ந்த மரங்கள்; குறுகலாக வளைந்து நெளியும் மலைப் பாதை; தோட்டத்தில் மேயும் ஆட்டு மந்தைபோல பைக் கூட்டம்; குண்டும் குழியுமான, சேறும் சகதியுமான ஆஃப் ரோடிங் பயணம்... எல்லையில்லா உற்சாகத்தோடு மேகமலையை அடைந்தோம்.
மேகமலையில், மழைச் சாரல் பெரு மழையாக மாறியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரம். வெப்பநிலை வேகமாகக் குறைந்து கொண்டே வந்தது. அங்கு இருந்த ஒரு சின்னக் கடை ஒன்றில் அனைவரும் தொடர்ச்சியாக 'டீ’ குடித்து, அங்குள்ள ஸ்நாக்ஸ் வகைகளையும் காலி செய்துவிட்டோம். இரவு நெருங்கியது. சூரியன் முழுமையாக மறைந்துவிட்டது. ஆனால், விடாத கன மழை. கூடாரம் அமைத்து, விறகுகள் தேடிச் சமைப்பது சாத்தியமற்ற ஒன்றாகிவிட... 'யாதும் ஊரே யாவரும் கேளிர்!’
டீக்கடைத் தாத்தா மற்றும் ஊர் மக்களை அணுகினோம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அல்லவா? பண்பாடு, விருந்தோம்பல், சற்றும் நலிவடையவில்லை என்பதற்குச் சான்றாக இருந்தனர் மேகமலை கிராம மக்கள். குளிரில் மிகவும் அவதிப்பட்ட இருவரை தங்கள் வீடுகளில் தங்க வைத்தனர். ஊர் கவுன்சிலர் உதவியோடு கிராம சமுதாயக் கூடத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கிடைத்தது.
இரவு உணவு இல்லாமல் உறங்க வேண்டிய சூழ்நிலையில், ஊர்மக்களின் பரிவு நெஞ்சை நெகிழ வைத்தது. டீக்கடைத் தாத்தா அவருடைய அடுப்பை வழங்க, ஊர் மக்களிடம் இருந்து விறகுகளை வாங்கிச் சமைக்கத் தொடங்கினோம். சுமார் நள்ளிரவு 12 மணிக்கு சூடான, சுவையான சாப்பாடு தயார். இரவு உணவு முடித்து கொஞ்சம் தூங்கினோம்.
காலையில் ஊர் மக்களோடு உரையாடினோம். மேகமலையின் முக்கிய தொழில் டீ எஸ்டேட்தான். பெரும்பாலும் மழை பெய்து கொண்டே இருப்பதால், மேகமலை என்ற பெயர் பொருத்தம்தான். பைக்குகளில் மேகமலையை வலம் வந்தோம். ஓயாத மழை, வழி நெடுகிலும் எண்ணற்ற ஏரிகள். ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி. எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு உற்சாகமாக இருந்தோம். ஆனால், வீட்டுக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. வந்த திசையை நோக்கிப் புறப்பட்டு அதிகாலையில் சென்னையை அடைந்தோம்.
(ட்ரிப் அடிப்போம்)
பயணத் திட்டத்துக்கு முன்பே பைக் நல்ல கண்டிஷனில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எதிர்பாராமல் பைக்கில் ஏதாவது பிரச்னை என்றால், அருகே உள்ள சர்வீஸ் சென்டரில் விட்டு விட்டு, குழுவுடன் பயணத்தைத் தொடர வேண்டும். நெடுஞ்சாலை, சின்ன சாலை எதுவாக இருந்தாலும்... பைக்குகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வதுதான் பாதுகாப்பு. மேலும், குழுவின் தலைவர் வழிகாட்டுதல்படி நடந்துகொள்வது முக்கியம்!
அயன் பட், பன் பர்னர் என பைக்கில் சாதனை செய்த பூங்கதிர்வேலனை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. போரடிப்பதாகத் தோன்றினாலே, பைக்கை எடுத்துக்கொண்டு தனியாகவோ அல்லது குழுவாக ஏதாவது ஒரு புதிய இடம் தேடிச் செல்லும் பூங்கதிர்வேலன், தான் சென்றுவந்த இடங்களைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார். 
 இவரது அனுபவம், பைக் பிரியர்களுக்கும் பயண விரும்பிகளுக்கும் நிச்சயம் ஒரு வழி காட்டியாக இருக்கும்.
மறக்க முடியாத குடகு!  
பைக்கர் மேனியா! Dec-2013

இந்த முறை குடகுமலைப் பயணத் திட்டம் தயாரானதும் 12 பைக்குகள், இரண்டு கார்கள் சேர்ந்துவிட்டன. கூட்டமாகச் சென்றால், அத்தியாவசியமான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது கூடுதல் அவசியமானது. சென்னை, கோயம்பேட்டில் மாலை 5.30 மணிக்கு ஒன்றிணைந்து, பயணத்தைத் துவக்கினோம்.
 மதுரவாயல், பூந்தமல்லி நகர நெருக்கடிகள் கடந்து காஞ்சிபுரம் டோல்கேட்டை எட்டியபோது இரவு 7 மணி. சென்னை - பெங்களூரு ஹைவே பயணத்தில் மிஸ் பண்ணக் கூடாதது, ஆம்பூர் பிரியாணி. ஆம்பூரை அடுத்த டோல்கேட்டில் இரவு உணவை முடித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
கிருஷ்ணகிரி அருகே எதிர்பாராதவிதமாக ஒரு பைக் பஞ்சர் ஆகிவிட... மற்ற பைக்குகளை பெங்களூரு டோல்கேட்டில் காத்திருக்கச் சொல்லி விட்டு, பஞ்சர் கடையைத் தேடிக் கண்டுபிடித்து, கடைக்காரரை எழுப்பிச் சரிசெய்து பெங்களூரு சேரும்போது, நள்ளிரவு 2 மணி. நைஸ் ரோடு வழியாக மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் நுழைந்தோம். பெங்களூர் - மைசூர் ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர்கள் ஏராளம்.பில்லியன்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மைசூருக்கு முன்பாக, ஆலமரத்தின் கீழே அனைவரும் குட்டித் தூக்கத்தைப் போட்டோம். சூரியன் உதயமானதும் சூடாக டீ குடித்துக் கிளம்பினோம். வழி நெடுகிலும் ஆற்றுப் பாலங்கள். செழிப்பான வயல்வெளிகள். குடகுமலை நுழைவாயிலான குஷால் நகரில் அழகான, தனிமையான இடம் 'திபெத்தியன் செட்டில்மென்ட்.’ மொத்தக் குழுவும் அங்கிருந்த தங்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். மிக அமைதியான இடத்தில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
அடுத்து, துபாரே யானைகள் முகாம். மடிகேரி செல்லும் சாலையில் இடதுபுறமாகத் திரும்பி, செந்நிறத்தில் சீறிப் பாயும் காவிரி ஆற்றின் ஓரமாக 12 கி.மீ சென்றால், கர்நாடக மாநிலத்தின் வன விலங்குப் பாதுகாப்பு துறையின் யானைகளின் உறைவிடம்.  படகில் ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் சென்றால், (காலை, மாலையில் மட்டும்) நாமே யானைகளுக்கு உணவளிக்கலாம் அல்லது யானைகள் ஆற்றில் குளிப்பதை ரசிக்கலாம். லேசான சாரலில் நனைந்தபடியே மலைப் பாதையில் ஏற ஆரம்பித்தோம். அடுத்த 30 கி.மீ தூரத்தில் கூர்க்கின் மடிகேரி.
மாலை 5.00 மணி அளவில், ஏராளமான டேக் டைவர்சன்ஸ் கடந்து, அபே அருவியை அடைந்தோம். பற்கள் டைப்ரைட்டிங் அடிக்க, மழைச் சாரலில் நனைந்தபடியே காட்டு வழியில் நடந்து அருவியை அடைந்தோம். மிரட்டலான அருவி. ஆனால், குளிக்க வசதி இல்லை. சூரியனும் மறைந்தது; அடர்ந்த வனப் பகுதியில் பயணத்தைத் தொடர்வது சிரமம். அதனால், அருகில் இருந்த கடை உரிமையாளரிடம் அனுமதி கேட்டு, இரவை அங்கேயே கழித்தோம்.
அதிகாலை விழித்துப் பார்க்கும்போது, பனி படர்ந்து அடர்ந்திருந்தது. அருமையான சூழல். இரவு தங்கியிருந்த மலை முகப்பின் ஒருபுறம் 1,500 அடி பள்ளம்; மறுபுறம் உயர்ந்த மலை. எங்கு பார்த்தாலும் அடர்ந்த செடி கொடிகள், மரங்கள். கண்களுக்குத் தென்படும் தூரம் வரை இயற்கையைத் தவிர வேறு யாருமே இல்லை. உற்சாகத்தோடு அனைவரும் பைக்கை எடுத்துக்கொண்டு அங்குமிங்கும் வட்டமடிக்க ஆரம்பித்தனர்.
மீண்டும் மடிகேரி வந்தபோது, 'நேர்வழியில் சென்னை திரும்பினால், த்ரில் இருக்காது. அதனால், ரூட்டை மாற்றிப்   பயணிக்கலாம்’ என்று குரல்கள் ஒலித்தன. அதனால், மைசூர் கடந்து நஞ்சன்கூடு வழியாக குண்டல்பேட் தாண்டி, 'பந்திப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் வரவேற்பு வளைவை அடைந்தோம். பந்திப்பூரில் மான்களும் மயில்களும் சாலையில் விளையாடிக்கொண்டிருக்க... உற்சாகம் கரை புரளத் துவங்கியது. அடுத்து, 'முதுமலை வனவிலங்குக் காப்பகம்’. பைக்குகள் மெதுவாக ஊர்ந்து செல்ல... சாலைக்கு மிக அருகே கோபமான இரண்டு காட்டு யானைகள். படம் எடுக்க முயற்சிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால், மெதுவாக யானைகளைக் கடந்தோம்.
மசினகுடி நீரோடையில் அனைவரும் இதமான குளியலோடு மதிய உணவை முடிந்தோம். மசினகுடி - ஊட்டி சாலை செங்குத்தான மலைப் பாதை. பைக்குகளும் கார்களும் மிகச் சிரமப்பட்டு மெதுவாக ஏறிக்கொண்டிருந்தன. ஊட்டியை நெருங்க நெருங்க குளிரின் தாக்கம் அதிகமானது. மாலை 5.30 மணிக்கு ஊட்டியை அடைந்தோம். ஊட்டி குளிரில் அனைவரும் ரைடிங் சூட்டிற்கு மாறிவிட்டனர்.
மேட்டுப்பாளையம் வரை மெதுவாகச் செல்ல... அவினாசியில் ஹைவே தென்படவும் வேகமெடுத்தன பைக்குகள். 11 மணிக்கு சேலத்தில் இரவு உணவை முடித்துவிட்டு, ஒரு தூக்கம். அதிகாலை 4 மணிக்கு பைக்குகள் சென்னையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தன. இரண்டு நாட்களில் சுமார் 1,500 கிமீ தூரம் பயணம். எங்கு ஆரம்பித்தோம்; எந்த வழியாகச் சென்றோம் என்பதை, கூகுள் மேப்பில் பார்க்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி அலாதியானது!