Saturday 24 November 2018

சென்னை to பிஆர் ஹில்ஸ்!

பைக்கர் மேனியா! Oct-2013

பசுமைச் சோலை!பயண அனுபவம்
சுற்றுலா என்றாலே பிரபலமான இடங்களுக்குச் செல்வதுதான் பலரது வாடிக்கை. இன்னும் பிரபலமாகாத ஏராளமான சுற்றுலாத் தலங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. அதில், ஓர் அற்புதமான இடம்தான் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் 'பிலிகிரி ரங்கசாமி ஆலய வனவிலங்குக் காப்பகம்!’ 
இதைச் சுருக்கமாக பிஆர் ஹில்ஸ் என்கிறார்கள். சென்னையில் இருந்து சுமார் 600 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த இடத்துக்குச் செல்ல மூன்று வழிகள் உள்ளன.
சென்னைவாசிகள், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளேகால் வழியாக பிஆர் ஹில்ஸ் செல்லலாம். பயணம் மிகவும் சுவாரஸ்யமாக அமைய வேண்டும் என்றால், சத்தியமங்கலம் மலைச் சாலை வழியாகவும் பிஆர் ஹில்ஸ் செல்லலாம்!
இம்முறை குழுப் பயணம் இல்லை. உடன் என் நண்பர் ஒருவர் மட்டுமே! சேலம், சத்தியமங்கலம் வழியாகச் செல்லலாம் என முடிவெடுத்துக் கிளம்பினோம். பயணம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே பைக்கை நன்கு சர்வீஸ் செய்துவிட்டதால், நம்பிக்கையோடு  சென்னையில் இருந்து மாலையில் கிளம்பி சேலத்தில் சிற்றுண்டியை முடித்துவிட்டு, இரவு 11 மணிக்கு சத்தியமங்கலம் அடைந்தோம்
சத்தியமங்கலம் சோதனைச் சாவடியில் பயங்கரக் கெடுபிடி. இரவில் பைக்கில் செல்ல அனுமதிக்க மறுத்த காவல்துறை அதிகாரியிடம் பேசி, ஒரு வழியாக அனுமதி வாங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மலைப் பாதையின் ஆரம்பத்தில் எனக்கு முன் வேகமாகச் சென்ற கார் சட்டென எச்சரிக்கை விளக்கு போட்டு நின்றது. பில்லியனில் இருந்த நண்பன் எச்சரிக்க... நானும் பைக்கை நிறுத்தினேன்.
நள்ளிரவு... காரிருள் சூழலில் யானைக் கூட்டம் ஒன்று மெதுவாகச் சாலையைக் கடக்க... த்ரில்லிங்காக இருந்தாலும் பயம் லேசாகக் கவ்வியது. ஹெட்லைட்டை டிம் டிப் மாற்றி மாற்றி ஒளிர விட்டுக்கொண்டே மெதுவாக பைக்கைச் செலுத்தினேன். எதிரே வந்த லாரியின் டிரைவர், 'ஆசனூர் அருகே யானைக் கூட்டம் சாலையில் நிற்கிறது. கவனமாகச் செல்லுங்கள்’ என்று சொல்ல... பயமும் பதற்றமும் அதிகரித்தது.
நள்ளிரவு ஒரு மணி. கொண்டை ஊசி வளைவு ஒன்றில் இருந்து பார்த்தபோது, மலைப் பாதை எல்லாம் யானையாகவே தெரிகிறது... ஒருவழியாக ஆசனூரை அடைந்தோம்.
ஆசனூரை அடுத்து இருக்கும் தமிழ்நாடு - கர்நாடகா எல்லை சோதனைச் சாவடியைத் தாண்டி நடுங்கும் குளிரில் பயணத்தைத் தொடர்ந்தோம். சாம்ராஜ் நகரை நெருங்கும் போது, தாத்தா ஒருவர் டீக்கடை திறந்து வைத்திருந்தார்.  அங்கு டீ குடித்துவிட்டு, அருகில் இருந்த கோயில் வளாகத்தில் காலை வரை ஓய்வெடுக்க அனுமதி கேட்டேன். நல் உள்ளம் கொண்ட தாத்தா, உறங்குவதற்குப் பாயும் தலையணையும் கொடுத்தார்.
அதிகாலை எழுந்து பிஆர் ஹில்ஸ் நோக்கிச் சென்றோம். காலை 6.30 மணிக்கு நாகவல்லி, நல்லூர் வழியாக பிஆர் ஹில்ஸ் சோதனைச் சாவடியை அடைந்தோம். வேறு மாநில வாகனங்கள் என்பதால், சிறிது நேர உரையாடலுடன் நுழைவுக் கட்டணம் செலுத்தி, சோதனைச் சாவடியைத் தாண்டியதும், கண்களுக்கு அருமையான விருந்து.
ஒற்றையடி மலைப் பாதை, சத்தம், அசுத்தம் என எவ்வித மாசும் இல்லாத தூய்மையான பாதை. புள்ளிமான் கூட்டங்கள் சாலையில் அங்குமிங்குமாக ஓடி விளையாட... ஆங்காங்கே செழிப்பான நாட்டுச் சேவல் கொண்டையை வீசி வீசி ஆட... காட்டெருமை திமிலுடன் கம்பீரமாக வலம் வர... அற்புதமான காட்சி. சற்று தூரத்தில் ஒரு அழகான செந்நிற நீர்த் தேக்கம். விதவிதமான பறவைகளின் கீச்சிடும் ஓசை. சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்தை அடுத்து, கிழக்கு நோக்கிப் பரந்து விரிந்த மலைத் தொடர்தான் இந்த பிலிகிரி ரங்கசாமி வனவிலங்குக் காப்பகம்.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே வன விலங்குகள் இடப் பெயர்ச்சிக்கான இணைப்புப் பாலம் என்றே இந்த இடத்தைச் சொல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 2,500 முதல் 3,500 அடி உயரம் கொண்ட இந்த மலையில், கால நிலை மிகவும் இதமாகவே இருக்கிறது. கடும் குளிர் விரும்பாதவர்களுக்கு மிகவும் ஏற்ற இடம். 'பசுமைச் சுடுகாடு’ என அழைக்கப்படும் டீ, காபி எஸ்டேட் இல்லாதது இந்த இடத்த்தின் சிறப்பு. எங்கு பார்த்தாலும் உயரமான மரங்களும் அடர்ந்த செடி கொடிகளுமாகத்தான் இருக்கிறது. இங்கு சுமார் 250 வகை பறவை இனங்களும், 800-க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் இந்த மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 13 புலிகள் இருப்பதாக சமீபத்தியக் கணக்கெடுப்பு கூறுகிறது.
பிஆர் ஹில்ஸ் மலையில் அழகான சின்ன வீடுகள். அங்கு பயிற்சி பெற்ற கும்கி யானைகள். அங்குள்ளவர்கள் யானைகளுடன் பயத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பிஆர் கோயிலை அடைந்தோம். சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக, விடுதிகள் அங்கு உள்ளன. பழைமையான பிலிகிரி ரங்கசாமி (பாலாஜி) கோயில், கன்னட மக்களுக்குப் பழக்கப்பட்ட இடம். அருமையான வியூ பாய்ன்ட், நிம்மதியாக ஓய்வு எடுக்கச் சிறந்த இடம். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்ப முடிவு செய்தோம்.
மேற்கில் இருந்து கிழக்காக மாதேஸ்வரன் மலை வழியாகப் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்து, ஏலாந்தூர் வழியாக கொள்ளேகால் அடைந்தோம். சாலை மிகவும் மோசமாக இருந்தது. 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் ஓட்டுவது சிரமமாக இருந்தது. வழியில் உள்ள மேல் மாதேஸ்வரன் மலைக் கோயில், மிகப் பழைமையான சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம். மாதேஸ்வரன் மலையில் இருந்து இறங்கி, தமிழக எல்லையைத் தொடும் வரை சாலை மோசமாகவே இருந்தது. அடுத்து காவிரித் தாய் கடல் போலக் காட்சியளிக்கும் மேட்டூர் அணையில், ஞாயிற்றுக் கிழமை என்பதால், கூட்டம் அலைமோதியது. அங்கே ஒரு குளியல் போட்டுவிட்டு, சுவையான அணை மீன்களை ஒரு கை பார்த்துவிட்டு, சென்னை திரும்பினோம்!
- ட்ரிப் அடிப்போம்

1 comment: