Saturday 24 November 2018

கனவில் புகுந்த வனம்! 

பைக்கர் மேனியா! Nov-2013


சென்னையில் இருந்து குற்றாலம், ஆரியங்காவு வழியாக கேரளாவுக்குள் நுழைந்தால், என்ன பார்க்கலாம்? இரண்டு பைக்குகள், நான்கு ரைடர்கள். விறுவிறுப்புக்கும் சுறுசுறுப்புக்கும் சற்றும் பஞ்சம் இருக்காது. இயற்கையை இலக்காகவைத்து ஆரம்பமானது பயணம். 
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்வது காற்றில் பறப்பது மாதிரியான சுகமான அனுபவம். மதுரை செல்லும் 135 கி.மீ தூரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. மதுரையில் சூடாக டீ அருந்திவிட்டு, ரிங் ரோடு வழியாக திருமங்கலம் அடைந்தோம். இங்கிருந்து குற்றாலம் சுமார் 160 கி.மீ. ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டியதும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் வரவேற்க, நீண்ட மலைத் தொடரை பராக்கு பார்த்தபடியே பைக்குகளை ஓட்டிச் சென்றோம்.
இது நால்வழிச் சாலை அல்ல. எனவே, நிதானமாகத்தான் செல்ல முடிந்தது. தென்காசி நெருங்கும்போதே பருவ நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. குற்றாலம் கடந்து ஐந்தருவி நோக்கிச் சென்றோம். வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைவு. தண்ணீரும் குறைவு.
நேரம் ஓடத் தொடங்க... பைக் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. செங்கோட்டை தாண்டியதும், நாம் எதிர்பார்த்து வந்த மலைப் பாதை ஆரம்பமானது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முகப்பில் உற்சாகத்துடன் நுழைந்தோம். ஆரியங்காவு தமிழக - கேரள எல்லை சோதனைச்சாவடியைக் கடந்ததும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன், பசுமைக் கம்பளம் விரித்து வரவேற்றன மலை முகடுகள்.
அடுத்த 15 நிமிடங்களில் 'பாலருவி’ செல்வதற்கான நுழைவுக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு கிளைச் சாலையில் மெதுவாகச் சென்றோம். நீண்டு பருத்த மரங்கள், பச்சையாக வளர்ந்த செடிகொடிகள் கண்களுக்கு விருந்தளிக்க, ஆற்றங்கரை அருகே ஒரு பெரிய ஆலமரம். அதன் கீழே இதமான தென்றலோடு பஞ்சுபோன்று மென்மையான புற்கள் படர்ந்திருந்தது. 'பாலருவி’ என்ற பெயர் இந்த அருவிக்கு எப்படிப் பொருந்தும் என்பதைப் பார்க்கும்போதே உணர முடியும். தென் கேரளத்தின் அடர்ந்த வனப் பகுதிகளை வலம் வருவோம் எனத் தெரியாமல் 'கல்லடா’ ஆற்றுப் படுகையில் பயணித்தோம்.
ஆற்றங்கரையை ரசிப்பதா? செழிப்பான இயற்கை வளத்தை ரசிப்பதா? இந்த அற்புத பூமியில் பைக்குடன் வலம் வருவதை ரசிப்பதா? என்ற கேள்விகளுக்கிடையே காடும் நீரும் இரண்டறக் கலந்து பச்சைப் பசேலென்று அமைதியாகத் தோன்றிய தென்மலை நீர்த்தேக்கம், வியப்பின் உச்சம்.
அடுத்து, பத்தனபுரத்தை அடைந்தோம். குமுளி வழியாக தமிழகம் திரும்ப முடிவெடுத்து, பத்தினம்திட்டாவில் இருந்து சபரிமலை செல்லும் பாதையைப் பிடித்தோம். எரிமேலி நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக்கொண்டே அதன் வளைந்து நெளிந்த பாதையில் பயணித்தோம். எரிமேலி தாண்டியதும், மலை மீது ஏறத் தொடங்கியது சாலை. குளிரோடு பயணத்தைத் தொடர்ந்தோம். அப்போது பெய்த மழைச் சாரலால், வெண் மேகங்கள் உதிர ஆரம்பித்தன. கண்கள் ரசித்த அற்புதக் காட்சிகளை, கேமராவில் பதிவு செய்ய நேரம் இல்லை. மீண்டும் இந்த வழியாக பைக்கில் வர வேண்டும் என மனதைத் தூண்டிய தருணம் அது.
வண்டிப் பெரியாரில், பெரியார் ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும் தேயிலைத் தோட்டம் வழிநெடுகிலும் பரந்துவிரிந்திருந்தது. குமுளியில் இருந்து மலையை விட்டுக் கீழே இறங்கும்போது, பெரியார் நீர் மின் நிலையத்துக்கான ராட்சதக் குழாய்களை ரசித்தபடியே இறங்கினோம். தமிழகத்தின் 'மருத நிலம்’ தென்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டும்போது நண்பனிடம் வலதுபுறமாகக் கைகாட்டி, 'இதோ தெரிகிறதே ஒரு மலைத்தொடர். இதுதான் நாங்கள் சென்ற மேகமலையின் பின் பக்கம்’ என்றதும் வியப்புடன் பார்த்தான். ஆனால், ஆச்சரியத்தின் உச்சக்கட்டம், கம்பத்தைத் தாண்டும்போது அரங்கேறும் என அப்போது தெரியாது. விழிகள் வலதுபுறமாகத் திரும்பும்போது தெரிந்த மலைத் தொடர், மீண்டும் மேகமலை.
'மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆழமும் அடர்வும் என்னவென்று இப்போதுதான் யூகிக்க முடிகிறது’ என்ற நண்பனின் கண்களில் களைப்பைத் தாண்டியும் ஆச்சர்யம். குமுளி - திண்டுக்கல் 160 கி.மீ. மீண்டும் மக்கள் நெரிசல்மிக்க பகுதியைக் கடந்து திண்டுக்கல் அடைந்தோம்.
மதிய உணவு மறந்துபோக, பயணம் உச்சகட்டக் களைப்பைத் தந்திருந்தது. பாலத்தின் அடியில் ஒரு குட்டி உறக்கத்தை அடுத்து, சர்வீஸ் ரோட்டில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்ட பிறகுதான் தெம்பு வந்தது. நினைவலைகள் மீண்டும் உயிர் பெற்றன. சேலத்தில் இருக்கும் என் வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது, நள்ளிரவு ஆகியிருக்க... தூக்கத்தில் விழுந்தோம். மீண்டும் கனவில் புகுந்துகொள்கிறது வனம்!

No comments:

Post a Comment